இருளர்களின் இனவரைவியலின் சுயவிபரம்

இருப்பிடம் மற்றும் சுற்றுச்சூழல்

பண்டைய பழங்குடிகளான இருளர்கள் நீலகிரி மலையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மலையின் அடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்குள் ஆறுகளை ஒட்டிய பட்டிகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் நிலத்தில் தனித் தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களின் வீடுகள் கூடாரம் போன்ற அமைப்பிலும், சமையலறை தனித்தும் காணப்படுகிறது.

 

மொழி

இருளர்கள் தங்களுக்கென்று தனி மொழியினை கொண்டுள்ளனர். இவர்களது மொழி ”இருளா மொழி”ஆகும். இந்த மொழியானது தென்திராவிட மொழியை சார்ந்தது. இருள மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. பேச்சு வழக்கு (ஒலி வடிவம்) மட்டும் உண்டு.

 

உருவத்தோற்றம்

இருளர்கள் பொதுவாக கருப்பு மற்றும் மாநிறத்தவர். நடுத்தர உயரமும் (சராசரி உயரம் 159 செ.மீ.) ஒரு சிலர் குறைவான உயரமும் கொண்டவர்களாக உள்ளனர். வயதான ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும், கையில் தடியும் தலையில் தலைப்பாகையும்; வயதான பெண்கள் புடவை ஜாக்கெட் அணிந்தும்; இடுப்பில் அல்லது கையில் வெற்றிலை பாக்கு பை வைத்தும் காணப்படுவார்கள். இருளப் பெண்கள் கொண்டையுடனும் கையில் கண்ணாடி வளையல் அணிந்தும் காணப்படுவர்.

 

பாரம்பரிய பழக்கவழக்கம்

இருளர்களின் 12 குலத்திற்கும் பொதுவான ஜாத்திக்காரர்களும், அந்ததந்த குலத்திற்கு தனிப்பட்ட தலைவரும், ஊர்த் தலைவரும் இருப்பார்கள். பிறப்பு, பெயர்சூட்டல், பருவடைதல், திருமணம் மற்றும் இறப்பு ஆகிய அனைத்து நிகழ்வுகளையும் ஜாத்திக்காரர் முன்னின்று நடத்துவார். இருளப் பெண்கள் பல்வேறு வடிவமைப்புகளில் நெற்றியிலும் கைகளிலும் பச்சைக்குத்தி கொள்கிறார்கள். வயதில் முதியவரின் காலைத் தொட்டு வணங்குவர். இவர்கள் நடப்பதற்கு சலிப்பதில்லை; இருவேளை உணவு அருந்தியே வாழ்பவர்கள்.

 

உணவுமுறை

இருளர்களின் முக்கிய உணவு கேழ்வரகு (ராகி), கம்பு, சாமை, சோளம் மற்றும் தினை போன்றவையாகும். காட்டில் கிடைக்கும் பல வகையான கிழங்குகள், கீரைகள், பழங்கள், தேன்கள் போன்றவற்றினை உணவாக உட்கொண்டு வருகின்றனர். இருளர்கள் பாரம்பரியம் அசைவம் சாப்பிடுவார்கள். மாட்டு இறைச்சியினை உண்ண மாட்டார்கள். பண்டையக் காலத்தில் சப்பாத்திக் கள்ளி பழம் முக்கிய உணவாக இருந்து வந்துள்ளது.

 

கலை மற்றும் இசை

இருளர்களுக்கு நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் உண்டு. அவர்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிப்பதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவைகள் அனைத்தும் எழுதப்படாத பதிவாக அமைந்துள்ளன. இவர்கள் எருமை ஆட்டத்தினை பாரம்பரியமாக ஆடியுள்ளனர். இருளர்கள் இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவர்கள். அவை தோற்கருவிகள் (பெரே, தம்பட்டே), துளைகருவிகள் (குவாலு, புகிரி, நாகசுர, ஜேங்கட்டே, ஜால்ரா (தாளம்), கொம்பு) என இரண்டு வகைகயாக உள்ளன. இக்கருவிகளை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.

 

பொருளாதாரச் செயல்பாடு

இருளர்கள் சிறுவனப் பொருள்களைச் சேகரித்து வியபாரிகளுக்கு விற்று வருமானம் பெறுகின்றனர். கால்நடை பராமரிப்பு மற்றும் மூங்கில் கூடைகள் பின்னி சந்தையில் விற்பதன் மூலம் பணத்தை பெறுகின்றனர். ஆரம்பக் காலத்தில் பண்டமாற்று முறையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேளாண்மை, தேயிலை, காப்பி தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர்.



பண்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

அரசு தற்போது வீட்டுவசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம் மற்றும் கல்விக்கூடம் போன்ற பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பல உதவிகளை ஏற்படுத்தி தந்துள்ளது.