குறும்பர்களின் இனவரைவியலின் சுயவிவரம்
இருப்பிடம் மற்றும் சுற்றுச்சூழல்
நாகரீக வளர்ச்சியின்றி எண்ணற்ற பழங்குடிகள் மலைகளிலும், காடுகளிலும், காடுகளை ஒட்டிய மலையடிவாரப் பகுதிகளிலும் தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலத்திலும் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். முள்ளு குறும்பர்கள் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகாவில் சேரங்கோடு பஞ்சாயத்தில் 12 இடங்களில் வாழ்கிறார்கள். பெட்ட குறும்பர்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் 35 கிராமங்களில் வாழ்கிறார்கள். ஆலு குறும்பர்கள் கோத்தகிரி, குன்னூர், உதகை ஆகிய தாலுகாவில் 41 கிராமங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் காடுகளுக்கு இடையில் மலைச் சரிவுகளில் தங்களின் இருப்பிடங்களை அமைத்து வாழும் பழங்குடி மக்களாவர்.
மொழி
இவர்களது மொழி தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய திருந்திய மொழிகளோடு கிளைமொழிகளையும் பேசி வருகின்றார்கள். இவர்களின் மொழி குறும்பா மொழி. இவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஒலி வடிவம் மட்டுமே உண்டு.
உருவத்தோற்றம்
குறும்பர்களின் நிறம் கருப்பு மற்றும் மாநிறம் ஆகும். முள்ளு குறும்பர்களின் தலைமுடி தடிப்பாகவும் சுருண்டும் இருக்கும். காதாலா என்ற காதணி அணிந்திருப்பார்கள். பெட்ட குறும்பர்கள் குள்ளமான உருவமும், நடுத்தர உயரமும் உடையவர்கள். பெண்களின் தலைமுடி கருப்பு மற்றும் செந்நிறம் கலந்த நிறத்தில் காணப்படும். ஆலு குறும்பர்கள் ஒரே மாதிரியான குட்டையான உருவ அமைப்பு உடையவர்களாக உள்ளனர்.
பாரம்பரிய பழக்கவழக்கம்
குறும்பர்கள் தேன் சேகரிப்பிலும், வேட்டையாடுவதிலும் வல்லவர்கள். இவர்களுடைய சமூகத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் பெண்கள் அனைவரும் அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றிவிட வேண்டும். முள்ளு குறும்பர்கள் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை எந்த சடங்குகளையும் செய்வதில்லை. இவர்கள் பழங்குடி அல்லாதவர்களிடமும் அன்பாக பழகும் பண்புடையவர்கள். ஆலு குறும்பர்கள் இயற்கையில் கிடைக்கும் இலைகளின் சாறிலிருந்து வண்ணங்களை சேகரித்து ஓவியம் வரைவதில் தலைசிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.
உணவு பழக்கம்
குறும்பர்கள் காட்டில் கிடைக்கும் பழங்கள், கீரைகள், கிழங்குகள், மூங்கில் குருத்து, மூங்கில் அரிசியும்; சிறுதானியங்களான திணை, ராகி, சோளம், சாமை; இறைச்சி வகைளான கோழி, ஆடு, மீன் போன்றவற்றையும் உணவாக உட்கொள்கிறார்கள். இவர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர்.
கலை மற்றும் இசை
இசைக் கருவிகளை தாங்களே தயாரித்து இசைப்பதில் வல்லவர்கள். இவர்கள் வழிவழியாக வாய்வழிக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழமொழிகளைக் கையாண்டு வருகிறார்கள். இசைக் கருவிகளான தாரை, கோல் ஊதல், தம்டை, கும்கு, தோல் கருவி, புகாரி, அரைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இசைக்கருவிகளை அனைத்து நிகழ்வுகளிலும் வாசிப்பார்கள்.
பொருளாதார செயல்பாடு
முற்காலத்தில் அடர்ந்த காடுகளில் கிடைக்கும் பொருள்கள் சேகரிப்பதிலும், தேன் எடுப்பதிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். சிலர் விவசாயம் சார்ந்து சாமை, ராகி, கீரைகள் போன்றவற்றைப் பயிரிடுகின்றனர். குறும்பர்கள் பலர் தேயிலை, காப்பி, குருமிளகு தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாகப் பழங்குடி அல்லாத மக்களிடம் பணிபுரிகிறார்கள்.
பண்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
குறும்பா இனத்தவர் மற்ற இனத்தவருடனும் இணக்கமாகப் பழகும் பண்புடையவர்கள். இவர்கள் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவமுறை கடைபிடிப்பவர்களால் உள்ளனர். இவர்களின் பாரம்பரிய தொழிலாக ஓவியம் வரைதல், தேன் எடுத்தல், விவசாயம் செய்தல், கூடை முடைதல் ஆகியனவாகும். தற்போது அரசு வீட்டுவசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம் மற்றும் கல்விக்கூடம் போன்ற பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது.