தமிழகத்தில் வாழும் ஆறுவகைப் பண்டைய பழங்குடிகளில் பணியர்கள் ஒருவராவர். இவர்கள் கேரளாவில் அதிகமாகவும், கர்நாடகத்தில் பரவலாகவும் காணப்படுகின்றனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூர்வ குடிகளாக வசித்து வருகின்றனர். பணியர் என்ற சொல் பணி என்று பொருள்படும். பணி என்றால் வேலை; இவர்களைப் பணியன் அல்லது பணியர் என்பர். ஆண்களைப் பணியர் என்றும் பெண்களைப் பணிச்சி என்று அழைப்பதுண்டு. பணியர்கள் பெரும்பாலும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பணியர்கள் 9824 ஆவர்.