கோத்தர்களின் இனவரைவியலின் சுயவிபரம்

இருப்பிடம் மற்றும் சூழல் அமைப்பு

நீலகிரி மாவட்டத்தைப் பூர்விகமாக கொண்டு வாழ்ந்து வரும் தொல் பழங்குடிகளில் கோத்தர் இனமும் ஒன்று. உயர்ந்த மலைப் பகுதிக்கும் மலை அடிவாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஐந்து வட்டங்களில் (உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா மற்றும் கூடலூர்) ஏழு கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கிராமத்தினை கோக்கால் என்று அழைக்கின்றனர்.

 

மொழி

கோத்தர் இன மக்கள் கோத்தர் மொழியை (கோவ்மாந்த்) பேசுகின்றனர். இவர்களது மொழி தென்திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இந்த மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. இவர்கள் பல மொழிகளைப் பேசும் திறன் படைத்தவர்களாகவும் உள்ளனர்.



உருவத்தோற்றம்

ஆண்கள் ஐந்து அடி முதல் ஆறு அடி வரையிலும் பெண்கள் நடுத்தர உயரமும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றனர். இவர்களது நிறம் வெள்ளை மற்றும் மாநிறமும் நீலநிறமுள்ள கண்களும், நீண்ட மூக்கும், அகன்ற நெற்றியும், கருத்த தலை முடியும் உடையவர்களாகத் திகழ்கின்றனர். பெண்கள் தலைமுடியைக் கொண்டை (மண்டு) முடிந்து கொள்கின்றனர்.

 

பாரம்பரிய பழக்கவழக்கம்

கொண்டை போட்டுக் கொண்ட கோத்தர் இன பெண்கள் வீட்டிலிருந்து வெளியே சென்று இரண்டு நாட்களுக்கு மேல் வெளியூரில் தங்கிவிட்டால் மீண்டும் கிராமத்திற்குள் வரும்போது பெரியவர்களிடம் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். கிராமத்தில் இருக்கும் போது காலணிகளை அணியக்கூடாது. சனி, திங்கள் ஆகிய நாட்களில் சூரியன் உதிர்ப்பதற்கு முன்பாக எழுந்து வீட்டினை சுத்தம் செய்து வாசலில் சாணத் தண்ணீர் தெளிக்க வேண்டும். அம்மாவாசை முடிந்து வரும் முதல் திங்கள் கிழமை அன்று ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் சூரியன் உதிர்பதற்கு முன்னதாக எழுந்து கலாச்சார உடையணிந்து குலதெய்வ கோவிலுக்கு செல்வார்கள்.

 

உணவு முறை

கால்நடை வளர்ப்பில் வீட்டு விலங்கான பசுமாடு மற்றும் எருமையை வளர்க்கின்றனர். உணவு வகைகளில் சிறுதானியம் மற்றும் பால், தயிர், வெண்ணை, நெய் போன்ற உணவுகளை விரும்பி உண்ணுகின்றனர். இக்காலக் கட்டத்தில் அரிசி உணவை அதிகமாக உண்ணுகிறார்கள்.



கலை மற்றும் இசை

பண்டைய காலம் முதல் கோத்தர் இனப் பெண்கள் கையிலும் காலிலும் வண்ண அமைப்பில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மூலிகைச் செடிகளை சேகரித்து மருத்துவம் பார்க்கிறார்கள். ஆண்கள் இளவட்டக் கல்லை மார்புக்கு மேலே உயர்த்தி காட்டுவார்கள். இசைக் கருவிகளான தாரை, தப்பட்டை, மத்தளம், முரசு, நாதஸ்வரம், கொம்பு போன்றவற்றை ஆண்கள் மட்டுமே இசைத்து வருகிறார்கள். திருமணம், திருவிழா மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளில் வாசிக்கிறார்கள். இவ்வாசிப்பிற்கு ஏற்றாற்போல் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக (வட்டமாக) நடனம் ஆடுவார்கள்.

 

பொருளாதாரச் செயல்பாடு

கோத்தர் பெண்கள் மண்பானை செய்வதும், ஆண்கள் பட்டறை வேலை மற்றும் தச்சு வேலை செய்து அவற்றினை விற்று பணம் ஈட்டுகின்றனர், விவசாயம், செய்தல், தேயிலை எடுத்தல், தேன் எடுத்தல், கால்நடை வளர்த்தல் மற்றும் கூலி வேலை செய்தும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

 

பண்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் 

பண்டையக் காலத்தில் பின்பற்றி வந்த கலாச்சாரத்தினை இன்றைய நவீன காலத்திலும் இவர்கள் பின்பற்றுகின்றனர். அரசு தற்போது வீட்டுவசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம் மற்றும் கல்விக்கூடம் போன்ற பல வசதிகளை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள், மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்  மூலம் பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது.