பணியர்களின் இனவரைவியலின் சுயவிபரம்
இருப்பிடம் மற்றும் சூழல் அமைப்பு
பணியர்களின் ஆதி வாழ்விடம் “கபரி” என்பதாகும். பெரும்பாலான வீடுகள் ஒரு அறை உடையதாகவும், திறந்த வெளி வராண்ட கொண்டதாக திண்ணை அமைந்தும் காணப்படும். இவர்கள் பெரும்பாலும் ஆறு, குளம் நிறைந்த இடங்களிலும், தேயிலைத் தோட்டத்திற்கு அருகிலும் தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள். தற்காலத்தில் சில கிராமங்களில் அரசால் மானிய வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டு அவ்வீட்டில் வசித்து வருகின்றனர்.
மொழி
பணியர்கள் தங்களுக்கே உரித்தான பணிய மொழியை பேசுகின்றனர். இவர்கள் பேசும்மொழி மூக்கின் உச்சரிப்பில் அமைந்துள்ளது. இம்மொழி தென்திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. பணிய சமூகத்தினரிடையே பேசும் பொழுது பணிய மொழியிலும், தமிழ் மக்களிடம் பேசும்போது தமிழிலும், கேரள மக்களிடம் பேசும்போது மலையாளத்திலும் பேசுகின்றனர். பணிய மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது, பேச்சு வழக்கு மட்டுமே உள்ளது.
உருவத்தோற்றம்
பணியர்கள் பொதுவாக மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள். தடித்த உதடு, நடுத்தர உயரம், கருமை நிறம் கொண்டவர்கள். முகம் வட்ட வடிவமாகவும், மூக்கு சிறியதாகவும் தட்டையாகவும் இருக்கும். தலைமுடி வாரப்படாமலும் சுருண்டும் இருக்கும். பெண்களின் தலைமுடி சுருண்டு தோள்பட்டைக்கு கீழ் வளராமலும் காணப்படும். பெண்கள் கைய்தெ என்ற பனை ஓலைகளில் காதணிகள் அணிந்து காணப்படுவார்கள்.
பாரம்பரிய பழக்கவழக்கம்
பணியர்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் குறைந்தது ஆறு பேர் முதல் பத்து பேர் வரை ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பீடி மற்றும் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் உடையவர்கள். பெரும்பாலும் உடற்பகுதியில் பச்சைக் குத்திக் கொள்வார்கள்.
உணவுமுறை
இவர்கள் வயல்களிலும் காடுகளிலும் கிடைக்கக்கூடிய கீரை, கிழங்கு வகைகளை அதிக அளவில் உட்கொள்கிறார்கள். ஆற்றிலிருந்து கிடைக்க கூடிய மீன், நண்டு வகையினையும் விரும்பி உண்பார்கள்.
கலை மற்றும் இசை
பணியர்கள் இசைக்கருவிகளைத் தாங்களாகவே தயாரித்துக் கொள்கின்றனர். திருமணம், திருவிழா, இறப்பு சடங்கு போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் இசைக்கருவிகளை வாசிப்பார்கள். துடி (உடுக்கை) ச்சீனா என்பது இவர்களின் இசைக் கருவிகளாகும்.
பொருளாதாரச் செயல்பாடு
விவசாய நிலமுள்ள செட்டிமார்களிடமும், சேட்டமார்களிடமும் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். தோட்டத்தில், நெற்பயிர், தேயிலை மற்றும் நறுமணப் பயிர்களை பயிரிடுவதற்கு பணியாள்களாக பணிபுரிந்து வருகின்றனர். புலி, சிறுத்தை போன்ற விலங்குகளைப் பிடிப்பதற்கும், வலை கட்டுவதற்கும் உதவியாளர்களாக இருந்துள்ளனர்.
பண்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
பழங்குடி அல்லாதவர்களிடம் எளிதில் பழகுவதில்லை. ஒரே குடும்பத்தில் குறைந்தது நான்கு குடும்பங்களாக வசிக்கின்றார்கள். வறுமைச் சூழல் காரணமாக மேல்நிலைக் கல்வி கற்பதில்லை. தற்போது அரசு இவர்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுவசதி மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளது.