தோடர்களின் இனவரைவியலைப் படிக்க

 

இருப்பிடம் மற்றும் சூழல் அமைப்பு

தோடர்கள் நீலகிரியிலே வாழ்ந்த மூத்த பழங்குடி மக்களாவர். ஒவ்வொரு மந்தும் (கிராமம்) பசுமையான வனத்துக்கும் நீரோடைக்கும் அருகில் உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவர்கள் மலை உச்சியில் புல் நிறைந்த மலைச்சரிவுகளில் அடர்ந்தக் காட்டுப் பகுதிகளில் இயற்கையோடு ஒன்றிணைந்து எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் குறிப்பாக தோடா நாடு, குந்தா நாடு, பெரங்கா நாடு, மேற்கு நாடு போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் நீலகிரியில் 67 மந்துகளில் 14 வம்ச வழியினராக உள்ளனர்.

 

மொழி

மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு குறிகள், அடையாளங்கள், முகக்குறிப்புகள், கைச்சாடைகள், ஓவியங்கள் எனப் பல கருத்து பரிமாற்றங்கள் உள்ளன. தோடர்கள் பேசும் மொழி ”தோடா” மொழியாகும். தென்திராவிட மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய மொழி. இம்மொழியின் ஒலிகளும், ஒலியமைப்பு முறைகளும் உச்சரிக்க அரிதாக உள்ளன. இம்மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது ஆனால் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது.

 

உருவத்தோற்றம்

ஆண்களும் பெண்களும் பழுப்பு நிறமுடையவர்கள். ஆண்கள் உயரமாகவும் நீண்ட மூக்குடனும், தலைமயிர் திண்மையாகவும், கறுப்பாகவும் அலை அலையாகவும் இருக்கின்றன. நீண்ட தாடியுடனும் காது ஓரங்களில் உரோமம் மிகுந்த அரிய உடலமைப்பைக் கொண்டுள்ளனர். பெண்கள் சுருள் சுருளான தலைமயிருடன் காணப்படுகின்றனர்.




பாரம்பரிய பழக்கவழக்கம்

எருமை இவர்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எருமையை கோவிலுக்கு சமமாக கருதுவார்கள். தோடர் ஆண்களும் பெண்களும் ”பூத்குளி” (PUTHKULI) என்னும் ஆடையை அணிகின்றார்கள். பெண்கள் தலைமயிரை சுருள் சுருளாக பின்னிக்கொள்வார்கள். பெண்கள் கையிலும் காலிலும் நகைகள் வடிவத்திலும் பச்சை குத்திக் கொள்கிறார்கள். பெண்கள் பெரியவர்களைக் கண்டால் மண்டியிட்டு ஆசிர்சாதம் பெறுவதை ”கோள் மீள் விடுத்” (Koll miill vitudh) என்பர். ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லையும் (இளவட்ட கல்) மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.

 

உணவுமுறை

இம்மக்களின் கலாச்சார உணவாக எருமைப் பால், உருண்டை சாப்பாடு (ஓட்விய்தோர்) அல்லது மோர் சாதம் ஆகும். சாதம் வடிக்காமல் களி போன்று செய்து அதில் வெண்ணை மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுகின்றனர். தோடர்கள் மாமிசம் உண்பதில்லை. தோடர் மக்கள் பழ வகைகளையும், காய்கறிகளையும், தினை வகைகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

 

கலை மற்றும் இசை

பண்டைய காலத்தில் வீடு மற்றும் கோவில் அரைவட்ட வானவில் வடிவத்தில் இருக்கும். நிர்ஷ் என்னும் மரத்தின் தண்டை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைப்பது இவர்களின் கலையாகும். திருவிழாக் காலங்களில் ஆண்களும் பெண்களும் கையை தட்டி தனித்தனியாக வட்டமாக நடனம் ஆடுவார்கள். இவர்களே இசையத்து பாடல் வரிகளை அமைக்கின்றனர். ஆண்கள் மட்டுமே இசைக் கருவிகளை தயாரித்து ஒரு சில நேரங்களில் மட்டுமே வாசிக்கின்றனர். இந்த கருவிக்கு புல்லாங்குழல் (புஹோரி) என்பர். பண்டைய காலம் முதல் சிறியவர் முதல் பெரியவர் வரை கால்பந்து விளையாட்டில் மாநில அளவில் வெற்றிபெற்று வருகின்றனர்

 

பொருளாதாரச் செயல்பாடு

ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் ஆடைகளில் வெவ்வேறு வகையான எம்பிராய்டரி  கைவேலைப்பாடுகள் செய்து விற்பணை செய்கின்றனர். கால்நடைகளின் மூலம் பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றினை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் தேன் எடுத்தல், வேளாண்மை செய்தல், வேளாண்மை கூலியாகவும் செயல்பட்டு வருகின்றார்கள்.



பண்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

 

பண்டையக் கால மனிதன் எப்படி வாழ்ந்தானோ அதை அப்படியே பின்பற்றி இன்றைய நவீன காலத்திலும் வாழ்ந்து வருபவர்கள் தோடர்கள். இளையோர் வயதில் முதியோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்குவார்கள். விழாக் காலங்களிலும், இறுதிச் சடங்குகளிலும் பாரம்பரிய உடையான பூத்குளியை இருபாலரும் அணிந்து கொள்வார்கள். பெரும்பாலும் எருமை மேய்த்தல், வேளாண்மை மற்றும் எம்பிராய்டரி நம்பியே வாழ்கின்றார்கள். இறந்தவருக்கு எருமை பலியிடுவது முக்கியமானது. இவர்களின் வாழ்விடங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளது. இவர்களுக்கென உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறியவர் முதல் பெரியவர் வரை கால்பந்து விளையாட்டில் மாநில அளவில் வெற்றிபெற்று வருகின்றனர்.