கோத்தர்கள் மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோ என்றால் ராஜா என்று பொருட்படும். கோத்தர் என்ற வார்த்தை தென் திராவிட மொழியிலிருந்து தோன்றியது. கோத்தா, கோத்தாஸ், கோத்தர் என்று இவர்களை அழைப்பதுண்டு. பேச்சு வழக்காக மட்டுமே இவர்களின் மொழி இருந்துள்ளது. கோத்தர்கள் வாழும் மலைப் பகுதியைதான் கோத்தகிரி என்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழும் கிராமத்தினை “கோக்கால்” என்றே அழைக்கின்றனர். குந்தா கோத்தகிரியை தலைமை இடமாகக் கொண்டு நீலகிரியில் கொல்லிமலை, சோலூர் கோல்கால், கோக்கால், கூடலூர் கோக்கால், புதுக்கோத்தகிரி, திருச்சிகடி, கீழ்கோத்தகிரி என ஏழு இடங்களில் மட்டுமே வாழ்ந்து வருகின்றார்கள். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் கோத்தர் இனமக்கள் 2024 பேர் உள்ளனர்.